வீட்டுமனை பட்டாவுடன் வீடு கட்டி தரக்கோரி வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாம் பாலினத்தினர் போராட்டம்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் வீட்டு மனை பட்டாவுடன் வீடு கட்டி தரக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாம் பாலினத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மூன்றாம் பாலினத்தினர் 30-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பணியில் இருந்து காவல் துறையினர் அவர்களை சமரசம் செய்து முக்கிய நபர்களை மட்டும் கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் அளிக்க அழைத்துச் சென்றனர்.

பின்னர் அளித்த மனுவில், ‘‘வேலூர் மாவட்டத்தில் மட்டும் மூன்றாம் பாலினத்தினர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காட்பாடி அடுத்த ஆரிமுத்து மோட்டூர் பகுதியில் அரசு வழங்கிய தொகுப்பு வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, இந்த தொகுப்பு வீட்டை முழுவதுமாக இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். வேலூரில் வீட்டுமனை வழங்கிய இடத்தில் புதிதாக வீடு கட்டித்தர வேண்டும். மற்ற மூன்றாம் பாலினத்தினர்களுக்கும் தனி வீட்டுமனைப் பட்டாவுடன் வீடு கட்டித்தர வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட மூன்றாம் பாலினத்தினர் அறக்கட்டளை சங்க தலைவி கங்காநாயக் கூறும்போது, ‘‘தமிழகத்தில் முதல் முறையாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தினர்களுக்கு கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த மோகன்தாஸ் தொகுப்பு வீடுகளை கட்டிக் கொடுத்தார். இங்கு தான் ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இலவச அறுவை சிகிச்சை என அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுளாக மற்ற மாவட்டங்களில் உள்ள மூன்றாம் பாலினத்தினர்களுக்கு புதிதாக தொழில் கடன், குழுக்களை அமைப்பது, சுய தொழில் செய்ய பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால், வேலூர் மாவட்டத்தில் இப்போது அனைத்து வகையிலும் மூன்றாம் பாலினத்தினர் பின்தங்கியுள்ளனர்.

அரசு கட்டிய தொகுப்பு வீட்டில் வசிக்கும் 40-க்கும் மேற்பட்டோர் வசிக்க முடியாமல் உள்ளனர்.எனவே, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வீட்டுமனைப் பட்டாவுடன் வீடுகளை கட்டித்தர வேண்டும்.

வேலூர் சாஸ்திரி நகர் பகுதியில் 14 பேருக்கு அரசு சார்பில் வீட்டு மனைப் பட்டா வழங்கினர். அங்கு வீடு கட்டுவதற்கு உள்ள தடையை நீக்கி உடனடியாக வீடு கட்டித்தர வேண்டும்’’ என்றார்.

அப்போது, மூன்றாம் பாலினத் தினர் நல வாரிய உறுப்பினர் சுதா, வேலூர் மாவட்ட செயலாளர் சிநேகா, துணைத் தலைவர் கண்ணகி, பொருளாளர் சீதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்