தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் நீதியரசர் கலையரசன் குழு பரிந்துரையை அரசு அமல்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
வேலூரில் மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சன்னி போஸ் படத் திறப்பு விழாவில் தொல்.திருமாவளவன் நேற்று பங்கேற்றார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் மதத்தின் பெயரால் வன்முறைகளை தூண்டுவதற்கு பாஜக மற்றும் சங்பரிவார் கும்பல் தீவிரமாக முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் காவல் துறையால் தேடப்படும் குற்றவாளிகள் அனைவரும் பாஜகவில் சேர்க்கப்படுகின்றனர். அவர்களை வைத்துக்கொண்டு மிக இழிவான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் அடிப்படை பிரச்சினைகள், மாணவர்கள், விவசாயிகள் பிரச்சினைகளுக்கு போராடாமல் மத வெறியை தூண்டும் வகையில் பாஜகவினர் செயல்படுகின்றனர். இதற்கு, அதிமுக அரசு ஒத்துழைப்பு அளிக்கிறது. இது எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.
தமிழகம் முழுவதும் நவம்பர் 3-ம் தேதி (இன்று) முதல் 5-ம் தேதி வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மகளிர் எழுச்சி, மக்கள் மீட்சி கருத்து பரப்புரை தொடங்குகிறது. தமிழகத்தில் நடைபெறும் அநாகரீக அரசியல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வன்முயை தூண்டும் சூழ்ச்சிதான் பாஜகவின் வேல் யாத்திரை. இதற்கு, தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலம் தாழ்ந்து 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் நீதியரசர் கலையரசன் குழு பரிந்துரையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.
இந்தாண்டு மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்கும்வரை மருத்துவப் படிப்புக்காக மத்திய ஒதுக்கீடாக வழங்கும் 15 சதவீதம் இடங்களை தமிழக அரசு அளிக்கக்கூடாது. இந்த விஷயத்தில் அரசு துணிந்து முடிவெடுக்க வேண்டும்.
மனு ஸ்மிருதியை தடை செய்ய வேண்டும் என அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். அரசும் அதை பரிசீலிக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள ஆலோசனை நடத்துவோம். பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அவரது தாயார் அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago