சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முழுமையான கல்வி, நடைமுறை மற்றும் வாழ்க்கைத் திறன் சார்ந்த கல்வியை அளிக்க தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட டி.எச். சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ராட்லர் தெருவில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் புத்தா தெருவில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இவற்றில் அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், ரோபாட்டிக்ஸ், ஓப்பன் சோர்ஸ் மைக்ரோ கன்ட்ரோலர் போர்டுகள், செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் மற்றும் 3டி பிரின்டர்கள் போன்ற ஆய்வக உபகரணங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு, சுய கற்றல்முறை வாயிலாக மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும் பலபள்ளிகளில் விரிவுபடுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளிகளில் மாணவர்களின் மனதில் புதுமை படைக்கும் திறன்மற்றும் அறிவியல் மனோபாவத்தை விதைக்கும் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள், அவர்கள் மத்தியில் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும். எனவே, மாநகராட்சியின் மடுவன்கரை மேல்நிலைப் பள்ளி, புல்லா அவென்யூ பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் எம்.ஜி.ஆர் நகர் மேல் நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும்இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இவற்றோடு, சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் வரவேற்பைப் பொறுத்து, பிற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago