கோயம்பேடு மொத்த விற்பனை பழச்சந்தை இன்று திறப்பு சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் நேரில் ஆய்வு

By செய்திப்பிரிவு

கோயம்பேடு வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கோயம்பேடு மொத்தவிற்பனை பழச்சந்தை 2-ம் தேதி திறக்கப்படும் என்றும், பழம் மற்றும் காய்கறி சிறு மொத்த வியாபாரம் வரும் 16-ம் தேதியிலிருந்து 3 கட்டங்களாக திறக்க அனுமதிக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து கோயம்பேடு பழச்சந்தை இன்று திறக்கப்பட உள்ள நிலையில், அந்த சந்தை திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதா என சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் தா.கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மழை காலத்தில் மழைநீர் வழிந்து செல்லும் வகையில், மழைநீர் வடிகால் துவாரங்கள் அடைப்பின்றி இருக்கிறதா எனவும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கோயம்பேடு மொத்த விற்பனை பழச்சந்தை திறப்பு குறித்து கோயம்பேடு சந்தை நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, "மாதவரம் தற்காலிக பழச் சந்தையில் மொத்தம் 250 கடைகள் இயங்கி வருகின்றன. தற்போது மொத்த விற்பனை சந்தையில், லாரியை நிறுத்தும் அளவுக்கு இடம் கொண்ட 130 மொத்த விற்பனை கடைகள் மட்டுமே திறக்கப்பட உள்ளன. மீதிக் கடைகள் மாதவரம் பேருந்து நிலையத்திலேயே வழக்கம்போல் இயங்கும். வரும் 16-ம் தேதிக்கு பிறகுபடிப்படியாக, சிறு மொத்த விற்பனையும் கோயம்பேட்டில் அனுமதிக்கப்படும். காய்கறி சந்தைக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்