முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் மற்றும் வல்லபாய் படேல் பிறந்தநாள் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள் உரிமை தினமாக கடைபிடிக்கப்பட்டு நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் இரு தலைவர்களின் உருவப்படத்துக்கு முன்னாள் எம்எல்ஏ பலராமன் தலைமையில், காங்கிரஸ் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.
இதற்கிடையே, விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள இந்திராகாந்தி உருவச் சிலை அருகில் எம்பியும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சு.திருநாவுக்கரசர் தலைமையில் அமைதி வழி சத்தியாக்கிரகம் நடைபெற்றது.
இதில், மாநில செயல் தலைவர் ஜெயக்குமார் எம்பி தேசிய செயலாளர் சி.டி.மெய்யப்பன், மாநில பொதுச்செயலாளர்கள் கே.தணிகாசலம், எம்.ஜோதி, சிரஞ்சீவி மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் சு.திருநாவுக்கரசர் கூறும்போது, ‘‘விவசாயம், விவசாய தொழிலாளர்களுக்கு எதிரான இந்த வேளாண்மை சட்டங்களைக் கைவிட வேண்டும். இந்த சட்டங்களை திரும்ப பெறக் கோரி காங்கிரஸ் நாடுமுழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், இந்த ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா அச்சத்தை காரணம் காட்டி ஜனநாயக ரீதியில் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஒரு மணி நேரம் கூட அனுமதியளிக்காத தமிழக அரசு, வேல் யாத்திரை நடத்த பாஜகவுக்கு எப்படி அனுமதி வழங்குகிறது என புரியவில்லை’’என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago