சேலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகள், வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் கூடும் இடங்களில் கரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க 8 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என சேலம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 7 மாதமாக ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், தொற்று அபாயம் நீடித்து வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, பொது இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்துக்கு மக்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். தீபாவளிக்கு தேவையான ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அதிகமாக வரத் தொடங்கியுள்ளனர்.
இதனால், சேலம் கடை வீதிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மாலை நேரங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க சேலம் மாநகராட்சி சார்பில் 8 சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் கூறியதாவது:
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலும் உள்ள சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கும் 42 அலுவலர்கள், பணியாளர்களை கொண்ட 8 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் மாநகரப் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப் புணர்வு பணிகள் மேற்கொள்வர். மேலும், திடீர் தணிக்கை மேற் கொண்டு கரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வர். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago