ஏற்காட்டில் பெரியேரிக்காடு, கொம்புதூக்கி உள்ளிட்ட 7 இடங்களில் அம்மா நகரும் ரேஷன் கடை சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
ஏற்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாழவந்தி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட, பகுதி நேர ரேஷன் கடைகளின் புதிய கட்டிடத் திறப்பு விழா, வேலூர் ஊராட்சியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா, மஞ்சக்குட்டை ஊராட்சியில் சேர்வராயன் காவேரி அம்மன் கோயில் நுழைவு வாயில் திறப்பு விழா, நகரும் ரேஷன் கடை தொடக்க விழா, மலைவாழ் மக்களுக்கு சாதிச் சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, ஆட்சியர் ராமன் தலைமை வகித்துப் பேசியதாவது:
மலைவாழ் மக்களின் குழந்தைகள் தொழிற்கல்வி கற்க, கருமந்துறையில் விடுதி வசதியுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர் சேர்க்கை மிகக்குறைவாக உள்ளது. 8-ம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்து தேர்ச்சி பெற்றிருந்தாலும் அல்லது தோல்வியுற்றிருந்தாலும் இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்திடலாம். அவ்வாறு சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு அரசின் அனைத்து உதவிகளும், சலுகைகளும் முழுமையாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்காடு எம்எல்ஏ சித்ரா பேசும்போது, “ஏற்காட்டில் சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கெல்லாம் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கிட ரூ.10 கோடி செலவில் தரமான குடிநீர் வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன” என்றார்.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் பேசும்போது, “விவசாயிகளின் மேம்பாட்டுக்காக ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் சார்பில் இதுவரை ஏறத்தாழ 750-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரூ.8.57 கோடிக்கு மேல் பல்வேறு வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மலைவாழ் மக்களின் சிரமங்களை போக்கிட, பெரியேரிக்காடு, புத்தூர், கே.நார்த்தஞ்சேடு, கும்மிபாடி, கொம்புதூக்கி, கோவிலூர், தாழ்கோவிலூர் ஆகிய 7 பகுதிகளுக்கு அம்மா நகரும் ரேஷன் கடை சேவை தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.
விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ராஜேந்திர பிரசாத், சேலம் ஆவின் பொது மேலாளர் நர்மதா தேவி, சேலம் வருவாய் கோட்டாட்சியர் மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago