வரும் சட்டப்பேரவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவில்பட்டி தொகுதியை கேட்போம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.
ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கோவில்பட்டியில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.அழகுமுத்துபாண்டியன் தலைமை வகித்தார். கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஏஐடியுசி கொடியேற்றி வைத்து பேசினார். நகர செயலாளர் அ.சரோஜா, தாலுகா செயலாளர் ஜி.பாபு, தொழிற்சங்கத்தை சேர்ந்த என்.குருசாமி, பி.பரமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆர்.நல்லகண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுதந்திர இந்தியாவில் சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார் பின்மை என்பது தான் அரசமைப்பின் அடிப்படை திட்டம். இந்த திட்டத்தை மறுக்கவோ, மாற்றவோ கூடாது. பாஜக வேல் யாத்திரை நடத்துவது அவர்களது கொள்கை. ஆனால், மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யக்கூடாது. எங்களது மதச்சார்பற்ற கூட்டணி, பாஜக எதிர்ப்பு கூட்டணியாக உறுதிபட உள்ளது.
தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் தான் எத்தனை தொகுதிகள் எங்களுக்கு என முடிவெடுக்கப்படும். பாஜகவின் மதவெறி, பிளவுபடுத்தும் சக்தியை முறியடிக்க வேண்டும் என்பதே லட்சியம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட கேட்போம். ஆனால், பேச்சுவார்த்தையில் தான் உறுதி செய்யப்படும்.
தமிழகத்தில் அதிமுகவுக்கு அரசின் கட்டமைப்பு பற்றி கவலையில்லை. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் நோக்கமாக இருக்கிறது. தமிழகத்தை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. அவர்கள் ஆட்சியை பலப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்களே தவிர, சட்டத்தில் என்ன இருக்கிறது. அதனை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்ற கவலை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago