தமிழகத்தில் வெங்காயம் வரத்து தட்டுப்பாடு காரணமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து, கூட்டுறவு கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்துக்கு லாரி மூலம் 14 டன் வெங்காயம் கடந்த 28-ம் தேதி கொண்டுவரப்பட்டது. இவற்றை பண்ணை பசுமை காய்கறி அங்காடிகள் மூலமாக கிலோ ரூ.45 விலையில் ஒரு நபருக்கு 2 கிலோ வீதம் விற்பனை செய்யும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. கிலோ 45 ரூபாய்க்கு வெங்காயம் கிடைக்கும் என்ற தகவலால் காட்பாடி காந்திநகரில் உள்ள பண்ணை பசுமை காய்கறி அங்காடியில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். வெங்காயம் வாங்க நேற்று காலை முதலே காய்கறி கடையின் முன்பாக கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு பணிக்காக காவல் துறையினர் வரவழைக்கப்பட்டனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வரிசையில் நிற்க வைக்கப்பட்டு வெங்காயம் விற்பனை நடைபெற்றது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்துள்ள வெங்காயத்தை விற்பனை செய்யும் பணி கடந்த 28-ம் தேதி மாலை தொடங்கியது. அன்றைய தினம் 200 கிலோவும், 29-ம் தேதி 1,500 கிலோவும், 30-ம் தேதி 1,950 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று (அக்.31) விற்பனைக்காக 2,300 கிலோ வெங்காயத்தை அனுப்பியுள்ளோம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago