‘ போக்ஸோ’ புகார்களை மகளிர் காவல் நிலையமே கையாள உத்தரவு பணிச் சுமையால் திணறும் மதுரை பெண் போலீஸார்

By என். சன்னாசி

மதுரையில் போக்ஸோ வழக்குகளை மகளிர் காவல் நிலையத்திலேயே கையாள வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளதால், கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளதாக மகளிர் போலீஸார் வேதனை தெரிவிக்கின்றனர்.

மதுரையில் திருப்பரங்குன்றம், மதுரை தெற்கு, வடக்கு (தல்லாகுளம்), நகர் என, 4 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் மட்டும் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பணிபுரிகின்றனர். ஆனால், மற்ற 3 காவல் நிலையங்களிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே காவலர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும், நீதிமன்றம், மாற்றுப்பணி, பாதுகாப்பு என தினமும் 10 முதல் 15 பேர் தவிர, மற்றவர்கள் வழக்கமான பணிகளைக் கவனிக்கின்றனர். இதனால் புகார்களை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. விசாரணையிலும் தொய்வு ஏற்பட்டு, சிறு பிரச்சினைகளுக்குக் கூட பொதுமக்களை சில நாட்கள் காவல் நிலையத்துக்கு அலைக்கழிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், 4 காவல் நிலையங்களிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே எஸ்.ஐ.க்கள் பணியில் உள்ளனர்.

அதிக எல்லைகளைக் கொண்ட திருப்பரங்குன்றம், தல்லாகுளம் மகளிர் காவல் நிலையங்களில் குறைந்தபட்சம் தலா 5 எஸ்ஐக்கள் தேவைப்படும் பட்சத்தில், ஓரிருவர் மட்டுமே பணிபுரிகின்றனர்.

ஏற்கெனவே போலீஸார் பற்றாக்குறை உள்ள சூழலில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமி தொடர்பான புகார்களை (போக்ஸோ) மகளிர் காவல் நிலையமே கையாள வேண்டும் என காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவால் தினமும் வரும் கணவன், மனைவி தகராறு, வரதட்சணைக் கொடுமை, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புகார்களை விசாரிப்பதில் தாமதம், கூடுதல் சிரமம் ஏற்படுவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: முன்பு போக்ஸோ (பாலியல் தொல்லை) புகார்களை மகளிர் காவலர்கள் உதவியோடு, அந்தந்த காவல் நிலையங்களே கையாண்டன. அவசியம் ஏற்படின் மகளிர் காவல் நிலையம் விசாரிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைப்பர். தற்போது, போக்ஸோ தொடர்பான புகார்கள் அனைத்தையும், மகளிர் போலீஸாரே கையாள உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற புகார்களில் வெளியூர் தப்பிச் செல்லும் சிறுவர், சிறுமிகளைக் கண்டறிந்து மீட்பது, வழக்குப்பதிவு செய்வது, நீதிமன்றம், மருத்துவப் பரிசோதனை , காப்பகத்துக்கு அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்ள தனியாகக் குழு தேவைப்படுகிறது. ஏற்கெனவே இரவுப் பணி, பாதுகாப்புப் பணி, காணாமல் போனவர்களை மீட்பது போன்ற தொடர் பணிகளால் ஓய்வின்றி சுழல்கிறோம்.

மதுரை நகரில் தினமும் போக்ஸோ பிரிவில் ஒவ்வொரு மகளிர் காவல் நிலையத்திலும் தலா ஒரு புகாராவது வருகிறது. ஏற்கெனவே காவலர்கள், எஸ்.ஐ.க்கள் பற்றாக்குறையால் பணிச்சுமை உள்ள நிலையில், போக்ஸோ புகார்களை கையாளுவதில் கூடுதல் சிரமம் உள்ளது. இதைக் காவல் ஆணையர் கருத்தில் கொண்டு சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்