சேலம் - விருத்தாசலம் நெடுஞ் சாலையில் சிறுபாக்கம் காவல் நிலைய சோதனைச் சாவடியில் நேற்று போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே விருத்தாசலம் நோக்கி வந்த மினி லாரியை சோதனை செய்வதற்காக வாகனத்தை நிறுத்த கையசைத்தனர். போலீஸாரைக் கண்டதும் வாகனம் நிற்காமல் வேகமாக சென்றது. போலீஸார் வாகனத்தை துரத்தி மடக்கி பிடித்து, சோதனை செய்தனர். அதில், ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் நூதன முறையில் மறைத்து கொண்டு செல்வது தெரிய வந்தது. ஓட்டுநரான சேலம் மாவட்டம் எரனாபுரம் பகுதியை சேர்ந்த தனபால் (25), அவருடன் கீளினராக வந்த அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (28) இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், வாகனத்தின் உரிமையாளரான அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (33) என்பவர் தங்களிடம் அந்த வாகனத்தை கொடுத்து விருத்தாசலம் செல்ல வேண்டும் என்றும், அங்கிருந்து தொலைபேசி தகவல் வரும் எனவும், அதன் பிறகு எங்கு செல்ல வேண்டும் என்பது தெரிய வரும் என தெரிவித்து அனுப்பி வைத்தார் எனத் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து சிறுபாக்கம் போலீஸார் குட்கா பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். அதை ஓட்டிவந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago