மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சியினரும் மாலை அணிவிப்பு

By செய்திப்பிரிவு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குரு பூஜை விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா, 58-வது குரு பூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று நடந்தது.

முதல்வர் மரியாதை

இதில் பங்கேற்கச் செல்லும் வழியில் மதுரை கோரிப்பாளை யத்தில் உள்ள பசும்பொன் சிலைக்கு முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் காலை 7.25 மணி அளவில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், காமராஜ், விஜயபாஸ்கர், பாஸ்கரன், கே.பி. முனுசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விவி.ராஜன் செல்லப்பா, எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், பெரிய புள்ளான் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் செல்லும் வழியில் மதுரை தெப்பக்குளத்தில் அமைந் துள்ள மருதுபாண்டியர் சிலைக்கும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மு.க.ஸ்டாலின் மரியாதை

இதைத் தொடர்ந்து கோரிப் பாளையம் தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக நிர்வாகிகள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு எம்எல்ஏ., சரவணன் எம்எல்ஏ., தங்கதமிழ்செல்வன், பி.டி.அரசகுமார், உள்ளிட்ட நிர்வாகிகளும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கும் அவர்கள் மாலை அணிவித்தனர்.

இவர்களைத் தொடர்ந்து காலை முதல் மாலை வரை பாஜக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், செல்லூர், கீரைத்துறை, வாழைத் தோப்பு, புதூர், காளவாசல் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முளைப்பாரி, பால்குடம்

செல்லூர், கீரைத்துறை ஆகிய பகுதிகளில் இருந்து பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்தனர். தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், புதுக்கோட்டை விராலிமலை வர்சா கிராமிய நடனக் குழுவினர் கடவுள் வேடமிட்டு வந்தனர்.

தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் தென்மண்டல ஐ.ஜி. முருகன், காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில் 4,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்