ஈரோடு மாநகராட்சியில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஈரோடு நகர சாலைகளில் நடந்தும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரையும் அச்சப்படுத்தும் வகையில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஈரோடு பேருந்து நிலையம், நாச்சியப்பா வீதி, சென்னிமலை சாலை, சம்பத்நகர், வீரப்பன்சத்திரம் என நகரின் பெரும்பாலான பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன. ரயில்நிலைய வளாகத்தில் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன.
உணவகங்கள், இறைச்சிக்கடை கள் அதிகமாக உள்ள பகுதிகளில் தெருநாய்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை தெருநாய்கள் கடித்து காயப்படுத்திய சம்பவம் நடந்தது. ஈரோடு அரசு மருத்துவமனையில் மட்டும் நாள்தோறும் 20-க்கும் மேற்பட்டோர் நாய்கடி காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தெருநாய்களைப் பிடித்து விஷ ஊசி போட்டு கொல்லும் நடைமுறைக்கு புளூ கிராஸ் போன்ற பிராணிகள் நலச் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் நிறுத்தப்பட்டது. மாறாக, நாய்களுக்கு கருத்தடை செய்யும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டமும் செயல்படுத்தப் படவில்லை.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறும்போது, ஈரோடு மாநகர் பகுதியில் கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அகில இந்திய பிராணிகள் நல வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் சார்பில், அதன் நிர்வாகிகளிடம் தகவல் கேட்டு வருகிறோம். இன்னும் ஒரு மாதத்தில் மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தொடங்கப்படும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago