சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டம் - மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஆட்சியர் ராமன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஆட்சியர் ராமன் பேசியது:
சேலம் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 4 வழக்குகளும், மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 7 வழக்குகளும் என மொத்தம் 11 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு வழக்குகளின் தன்மையறிந்து உரிய முடிவுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வழக்குகள் சார்ந்த கருத்துக்களை அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட காவல் துறை அதிகாரிகள் உரிய விளக்கத்தினை தெரிவிக்க வேண்டும். இது முதல் கூட்டம் என்பதால் கூட்டத்தின் கருத்துக்கள் உரிய முறையில் ஆய்வு செய்து, குழு உறுப்பினர்களின் ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கூட்டத்தில் ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த சட்டம் படித்த பட்டதாரிகள் சொந்தமாக தொழில் தொடங்க ஊக்குவிப்பு தொகையாக 5 நபர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.2,50,000-க்கான காசோலையை மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர் ராமன் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கோ.சாந்தி, சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சேலம் மாநகர காவல் உதவி ஆணையர்கள் நாகராஜன், அனந்தக்குமார், யாஸ்னி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago