பண்ணைப் பசுமைக் கடைகள் மூலம் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்வதற்காக, ஈரோட்டிற்கு 5 டன் வெங்காயம் தருவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.
வட மாநிலங்களில் கடும் மழைப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால், வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயைத் தாண்டி விற்பனையாகும் நிலையில், விலையைக் கட்டுக்குள் கொண்டு வர, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மானிய விலையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி ஈரோடு பண்ணை பசுமை நுகர்வோர் கடை மூலம் மானிய விலையில் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கி வைத்து, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் வெங்காயம் பதுக்கல் எதுவும் நடைபெறவில்லை. வரத்து குறைவானதால், கடைகளில் கிலோ ரூ.80-க்கு விற்பனையாகிறது. வெங்காய பதுக்கல் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்ய 5 டன் பெரிய வெங்காயம் வரத்தாகியுள்ளது. முதற்கட்டமாக ஒரு நபருக்கு ஒரு கிலோ வெங்காயம் வழங்கப்படும். பின்னர் படிப்படியாக அளவு அதிகரிக்கப்படும்.
இன்று முதல் உழவர் சந்தை மற்றும் தேவையின் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago