ஊராட்சிக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.2.32 லட்சம் கைப்பற்றப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள ஊராட்சிக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர், நேற்று முன்தினம் மாலை சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் சங்க அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சோதனை குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் கூறியதாவது:
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, இங்கு பணியாற்றுபவர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்குத் தொடங்கிக் கொடுத்துள்ளனர்.
வங்கி வரவு செலவு புத்தகத்தை பெற்றுக் கொண்டு அவர்களுக்குத் தெரியாமலேயே கடன் தொகையை சங்கத்தினர் எடுத்து முறைகேடு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் குணசேகரன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
பள்ளிபாளையத்தில்சோதனை
பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் மாலை சோதனையில் ஈடுபட்டனர். இதில் வரி வசூலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்தது. சோதனையில் கணக்கில் வராத ரூ.55 ஆயிரத்து 420 கைப்பற்றப்பட்டது. ஆவணங்களை ஆய்வு செய்ததில், வரி வசூல் பணத்தில், வங்கிக்கு செலுத்திய தொகையில் ரூ.7 ஆயிரத்து 968 கையாடல் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago