ஆதரவற்ற சடலங்களின் ஆதரவாளன் ஆத்மா அறக்கட்டளை: இதுவரை 1,675 சடலங்கள் அடக்கம்

By டி.ஜி.ரகுபதி

உலக வாழ்க்கையில் பிறப்பும்,இறப்பும் ஒருமுறையே. வாழ் நாளில் பெற்றோர், உறவினர்களின் ஆதரவு, அரவணைப்புடன் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றி உயிரிழப்போர் அதிகம். அதேசமயம், பல்வேறு காரணங்க ளால் குடும்பத்தை விட்டு பிரிந்துதனிமையில் வசித்து, வாழ்க்கை யின் இறுதிக்கட்டத்தில் எவ்விதஆதரவும் இன்றி உயிரிழப்ப வர்களும் உள்ளனர். இவ்வாறு ஆதரவின்றி உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இருந்தாலும், கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ஆத்மா அறக்கட்டளை குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றிவருகிறது.

இந்த அமைப்பின் செயல்பாடு கள் குறித்து அதன் நிறுவனர் சரவணன் என்ற கந்தவேலன் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது: கடந்த 2001-ம் ஆண்டு சிங்காநல்லூர் அரவான் கோயில் மேடை அருகே, ஆதரவற்று வசித்த முதியவருக்கு நாங்கள் உணவளித்தோம். அப்போது ஆத்மா அறக்கட்டளை தொடங்கப்படவில்லை. அடுத்த சில நாட்களில் அந்த முதியவர் வயோதிகத்தால் உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்யயாரும் முன்வரவில்லை. அப்போ தைய சிங்காநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், என்னையும் எனது நண்பர்களையும், அந்த முதியவரின் சடலத்தை அடக்கம் செய்ய உதவிக்கு அழைத்தார். நாங்கள் சென்று முறையான சடங்குகள் செய்து அவரை அடக்கம் செய்தோம். அதன் பின்னர், இவ்வாறு உதவி செய்ய முடிவு செய்து2002 ஜூன் மாதம் ஆத்மா அறக் கட்டளையை தொடங்கினோம். இதற்காக எனக்கு சொந்தமான இடத்தை விற்றேன்.

நான் நிறுவன தலைவராகவும், நண்பர்கள் நந்தகோபால், கார்த்திக், இமயம் ஆனந்த், ஏஆர்சி ராஜேந்திரன், லயன்ஸ் கிளப் நக்கீரன் ஆகியோரை செயற்குழு உறுப்பினர்களாகவும் அதில் இணைத்தோம்.

அறக்கட்டளை தொடங்கு வதற்கு முன்பு வரை, நாங்கள் 6 பேரும் சேர்ந்து 80 ஆதரவற்றோரின் சடலங்களை அடக்கம் செய்துள்ளோம். அறக்கட்டளை தொடங்கியதில் இருந்து தற்போது வரை 1,675 சடலங்களை அடக்கம் செய்துள்ளோம். ஆதரவின்றி உயிரிழப்பவர்கள், ரயில்களில் அடிபட்டு அடையாளம் தெரியாமல் உயிரிழப்பவர்கள் இதில் அடக்கம். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 27 பேரையும் அடக்கம் செய்துள் ளோம். அரசு மருத்துவமனையில், இரவு நேரத்தில் உயிரிழந்த 85 குழந்தைகளின் சடலத்தையும் இலவசமாக அடக்கம் செய்துள் ளோம்.

ஒரு சடலத்தை அடக்கம் செய்ய ரூ.2,500 செலவாகும். யாரிடமும் நன்கொடை கேட்டதில்லை. ஆதரவற்றவர்களின் சடலம் இருந்தால், காவல் துறையினர் எங்களைஅழைப்பர். நாங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சடலங்களை எடுத்துச் சென்று, குளிப்பாட்டி சுத்தம் செய்து உரிய முறையில் இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்து வருகிறோம்.

அதிகபட்சமாக ஒரேநாளில் 22 சடலங்களை அடக்கம் செய்து இருக்கிறோம். 10 நாட்களுக்கு முன்னர் சிங்காநல்லூரில் உயிரிழந்த பார்வையற்ற பரமேஸ்வரன்(75) என்ற முதியவரின் சடலத்தை அடக்கம் செய்தோம்.

அதேபோல, ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாமல் சிரமத்தில் இருந்த சிங்காநல்லூரைச் சேர்ந்த பள்ளி மாணவன் கார்த்திகேயனுக்கு நானும், சிங்காநல்லூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அர்ஜூன் குமாரும் இணைந்து, எங்களது சொந்த தொகையை அளித்து ரூ.13 ஆயிரத்துக்கு புதிய செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளோம். ஊரடங்குஅமலானதில் இருந்து ஏழைமக்களுக்கு மளிகைப் பொருட்கள்,உணவு வகைகள் உள்ளிட்டவற் றையும் வழங்கிவருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்