தமிழகத்தில் முதல் முறையாக பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலையில் நுழைவுத் தேர்வு; மாலையில் முடிவுகள் வெளியீடு

By த.சத்தியசீலன்

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் எம்.ஃபில்., பிஹெச்.டி.நுழைவுத் தேர்வு ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் ம.இளஞ்செழி யன் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:

2020-21-ம் கல்வியாண்டுக்கான எம்.ஃபில்., பிஹெச்.டி. நுழைவுத் தேர்வு இணையதளம் வழியாக கடந்த 27-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு 2,872 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இணைய தளத்தில் முதல்முறையாக நுழைவுத் தேர்வு நடத்துவதால், தேர்வு நடைமுறைகள் குறித்த அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டன.

முன்னதாக கடந்த 23-ம் தேதி மாதிரி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது கணினி வசதி, இணையதள வசதி இல்லாமை, மலைப் பகுதிகளில் நெட்வொர்க் பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் முறையிட்டனர்.

இதையடுத்து, துணை வேந்தரின் அறிவுறுத்தலின் படி, பல்கலைக் கழகத்தில் உள்ள இணையதள மையம் மற்றும் ஜவுளித் துறை வளாகங்களில் 200 கணினிகள் பொருத்தப்பட்டு, அவர்களை நேரடியாக வரவழைத்து நுழைவுத் தேர்வெழுத வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

இதில் 94 பேர் கலந்து கொண்டனர். 2,563 பேர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயனர் எண் மற்றும் கடவுச் சொல் பயன்படுத்தி, இணையதளம் வழியாகத் தேர்வெழுதினர். 215 பேர் மட்டுமே தேர்வெழுத வில்லை. ஓஎம்ஆர் தாளில் விடையளிக்கும் வகையிலும், வினாக்களுக்கு ஏற்ற விடைக் குறிப்புகளை தனியாக பதிவேற்றம் செய்தும் கணினியில் தயார் நிலையில் வைத்திருந்தோம். தேர்வு முடிந்ததும், துறை வாரியாக வினாக்களும், விடைகளும் கணினி மூலமாக பொருத்தப்பட்டு, மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டன.

மாலையில் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஒரே நாளில் நுழைவுத் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிடுவது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும். இவ்வாறு ம.இளஞ்செழியன் கூறினார்.

நுழைவுத் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிடும் பணியில் ஈடுபட்ட பேராசிரியர்கள், தொழில்நுட்பக் குழுவினரை துணைவேந்தர் பெ.காளிராஜ், பதிவாளர் க.முருகன் ஆகியோர் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்