மழை பாதிப்பு மீட்பு பணிக்காக 10 பேரிடர் குழுக்கள் அமைப்பு: சென்னை காவல் ஆணையர் நடவடிக்கை

சென்னை மக்களை மழைக்கால விபத்துகளில் இருந்து பாதுகாக்க மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட காவல்துறை சார்பில் 10 பேரிடர் மீட்பு குழுக்களை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அமைத்து அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளார்.

வடகிழக்கு பருவ காற்றால் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடானது. சாலையோரங்களிலும் சாலைகளிலும் மழைநீர் தேங்கியதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பெருமழைக் காலங்களில் மாநகராட்சி உட்பட பிற துறையினருடன் இணைந்து காவல் துறையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஏற்கெனவே போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் மழை பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் உதவிகளைச் செய்யவும் வசதியாக 10 பேரிடர் மீட்பு குழுக்களை ஆணையர் அமைத்துள்ளார். காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் ஆயுதப்படை காவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் நீச்சல், வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் உள்ள காவலர்கள் உள்ளனர். மேலும் அனைத்து காவல் மாவட்டங்களிலும் சிறப்பு பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதான வளாகத்தில் காவல் துறை பேரிடர் மீட்பு குழுவினருக்கு தேவையான உபகரணங்களை ஆணையர் நேற்று வழங்கினார். பின்னர் சென்னை காவல் மண்டலங்களுக்கும் உபகரணங்களை அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்வின்போது, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் ஏ.அமல்ராஜ் (தலைமையிடம்), ஆயுதப்படை துணை ஆணையர் சவுந்தர்ராஜன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்