சென்னையில் கடந்த 2015-ல் ஏற்பட்டதுபோல வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது என்று முன்கூட்டியே தெரிந்தும் முதல்வரும், உள்ளாட்சித் துறை அமைச்சரும் காட்டிய அலட்சியத்தால் ஒருநாள் மழையைக் கூடத் தாங்க முடியாமல் சென்னை மாநகரத்தின் முக்கிய சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. தொடரப் போகும் வடகிழக்குப் பருவமழையால் சென்னை மீண்டும் ஒரு டிசம்பர் 2015 வெள்ள அபாயத்தைச் சந்திக்கப் போகிறதோ என்ற அச்சம் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால்வாய்களை முறைப்படி முன்கூட்டியே தூர்வாரி, சீரமைத்து, வேண்டிய இடங்களில் அகலப்படுத்தி, இந்தப் பருவ மழையைச் சந்திக்கச் சென்னை மாநகராட்சி தயாராகியிருக்க வேண்டும்.
கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, உடனடியாக மழை நீர்வடிவதற்கான அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்குப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், ஏழை எளியோர்க்கு உணவு உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழக அரசால் முடியவில்லை என்றால் பேரிடர் மீட்புப் படையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைத்து சென்னை மாநகரைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மீண்டும் ஒரு டிசம்பர் 2015 வெள்ளம் ஏற்படாமல் தடுக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் விரிவான முறையில் அதிமுக அரசு செய்ய வேண்டும்.
சென்னை மாநகரில் உள்ள திமுக எம்பி., எம்எல்ஏ.க்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்காங்கே தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago