புதுச்சேரி அமைச்சரவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடங்களை வழங்க முடிவு செய்துள்ளதை செயல்படுத்த மத்திய பாஜக அரசு அனுமதிக்க வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங் கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற முதல்வர் நாராயணசாமியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அரசின் இந்த முடிவு புதுச்சேரியில் உள்ள சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற வழிவகுக்கும். மேலும், அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைவு என்ற காரணம் காட்டி அரசுப் பள்ளிகளை மூடும் முடிவிற்கு முதல்வரின் இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைக்கும்.
மேலும், மத்திய பாஜக அரசு 2017-2018-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு முறையை அமல்படுத்தியதால் ஏழை எளிய மாணவர்களுக்கான மருத்துவக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கு எதிரான இந்த முடிவை நடைமுறைப்படுத்தியதால் மேலும் சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும்.
இந்தப் பின்னணியில் கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பை ஏற்படுத்திட புதுச்சேரி அமைச்சரவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடங்களை வழங்க முடிவு செய்துள்ளதை செயல்படுத்த மத்திய பாஜக அரசு அனுமதிக்க வேண்டும். மேலும், மத்திய அரசுக்கு மாநிலம் வழங்கும் மருத்துவ இடஒதுக்கீட்டில் இருந்து பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago