மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தலைவர்களின் பரிந்துரையின் அடிப்படையில்தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழுவில் உறுப்பினர்களாக 3 எம்.பி.க்களை மத்திய அரசு நியமிக்கும் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வந்து அடிக்கல் நாட்டிச் சென்று ஓராண்டுக்கு மேலாகியும் கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை. ஜப்பான் நாட்டு நிதி நிறுவனத்திடமிருந்து நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத் துறை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் மற்றும் 14 பேர் கொண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களை நியமித்து உத்தரவிட்டது. 3 எம்.பி.க்கள் உட்பட மொத்தம் 17 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டிய நிலையில், மத்திய, மாநில அரசு செயலாளர்கள், மருத்துவ வல்லுநர்களை உள்ளடக்கிய 14 பேர் தற்போது உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எம்.பி.க்கள் யாரும் இடம்பெறவில்லை.
இதுகுறித்து மதுரையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் குழுவில் எம்.பிக்களை சேர்க்காமல் இருப்பது விசித்திரமாக இருக்கிறது. தமிழகத்தில் பாஜகவுக்கு எம்.பி.க்கள் இல்லாத காரணத்தால் எய்ம்ஸ் குழுவில் எம்.பி.க்கள் யாரும் இடம்பெறவில்லை" என்று குற்றம் சாட்டினார். இதே கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனும் தெரிவித்திருந்தார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரிடம் கேட்டபோது, "தவறான தகவல் பரவுகிறது. மக்களவைத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவர் மூலம் தனித்தனியே தேர்தல் நடத்தப்பட்டோ அல்லது ஒருமித்த கருத்தின் அடிப்படையிலோ எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழு உறுப்பினர்களாக பரிந்துரை செய்யப்படுவார்கள். அவர்களை மத்திய அரசு நியமிக்கும். மத்திய அரசால் நேரடியாக எம்.பி.க்களை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக நியமிக்க முடியாது என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago