உலக சுகாதார அமைப்பும், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டமும் இணைந்து அக்டோபர் மாதம் கடைசி வாரத்தை காரீய நஞ்சைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு வாரமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
மாசு நீக்குவதற்கான பன்னாட்டு கூட்டமைப்போடு, அருளகம் அமைப்பினர் இணைந்து இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் ஈரோடு, கோவை, நீலகிரியில் நடத்துகின்றன. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக டிஜிட்டல் பதாகையுடன் கூடிய வாகனப்பிரச்சாரம் ஈரோட்டில் நேற்று தொடங்கியது.
தமிழகப் பழங்குடி மக்கள் சங்கத்தைச் சேர்ந்த வி.பி.குணசேகரன் முன்னிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.என்.ராஜா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இப்பிரச்சாரம் அவிநாசி, அன்னூர், மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டியைச் சென்றடையும்.
நிகழ்வில் பங்கேற்ற இந்திய மருத்துவர் சங்க தமிழக தலைவர் சி.என்.ராஜா கூறியதாவது
காரீயம் ஒரு நஞ்சு என்பதே பொதுமக்களுக்குத் தெரியாதிருப்பதால், இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேவையாய் உள்ளன. காரீயம் கலந்த பெயின்டால், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. இவ்வகைப் பெயின்ட் பயன்பாட்டை நீக்குவதற்கு இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்து பேசி வருகிறது, என்றார்.
அருளகம் அமைப்பின் செயலாளர் சு.பாரதிதாசன் கூறுகையில், இந்தியாவில் எடுக்கப்பட்ட பெயின்ட் மாதிரிகளில், அதிகளவு காரீயம் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இருப்பது கவலையளிக்கிறது. தமிழகத்தில் விற்கப்படும் அனைத்துப் பெயின்ட்களையும், அரசு சோதனைக்கு உட்படுத்தி, அதில் 90 பிபிஎம் அளவிற்கு மேல் கரீயம் உள்ள பெயின்ட்களின் உற்பத்தியை தடைசெய்ய வேண்டும். காரீயம் சேர்க்காத பெயின்ட் என்ற இலக்கை 2020-க்குள் எட்ட இந்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வுப் பயணம் இருக்கும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago