சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கு மன்னார்குடி வனத்துறை அலுவலகத்தில் இருந்து அரிய வகை உயிரினமான 3 மரநாய் குட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா தமிழகத்தின் சிறு உயிரியல் பூங்காக்களில் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. இங்கு மான், குரங்கு, முதலை, வெள்ளை மயில் உள்பட 160-க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் உள்ளன. சேலம் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக உள்ள குரும்பப்பட்டி பூங்காவில் மேலும் புதிய விலங்குகளை கொண்டு வர வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இருந்து 6 மாத வயது கொண்ட ஒரு ஆண், 2 பெண் என 3 மரநாய் குட்டிகள் குரும்பப்பட்டி பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவை தனிக்கூண்டில் அடைக்கப்பட்டு பராமரிப்பில் உள்ளன.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரிய வகை இனமான மரநாய்கள் சிவப்பு பட்டியலில் உள்ளது. வனப்பகுதியில் எலி, பாம்பு, சிறிய முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடி உண்ணக்கூடியது. மன்னார்குடி வனப்பகுதியில் 3 குட்டிகளை ஈன்ற மர நாய் உயிரிழந்துவிட்டது. மரநாய் குட்டிகளை வனத்துறையினர் மீட்டு பராமரித்து வந்தனர். தற்போது, இவை சேலம் குரும்பப்பட்டி பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago