சேலத்தில் ஏற்கெனவே கூட்டுறவு அங்காடிகள் மூலம் 2 டன் வெங்காயம் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், மேலும், 5 டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
வடமாநிலங்களில் பெய்து வரும் மழையால் தமிழகத்துக்கு பெரிய வெங்காயம் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, தமிழக அரசு கூட்டுறவுத் துறை மூலம் மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பொன்னி கூட்டுறவு சிறப்பங்காடி மற்றும் பள்ளப்பட்டி பண்ணை பசுமை காய்கறி விற்பனை நிலையம் மூலம் பெரிய வெங்காயம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று 5 டன் பெரிய வெங்காயம் கூட்டுறவுத் துறை மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சேலம் ஸ்வர்ணபுரி பொன்னி கூட்டுறவு சிறப்பங்காடி மற்றும் என்ஜிஜிஓ அங்காடியில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் ராஜேந்திரபிரசாத் கூறியதாவது:
சேலத்தில் ஏற்கெனவே 2 டன் பெரிய வெங்காயம் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டது. மேலும், 5 டன் வெங்காயம் தருவிக்கப்பட்டு நான்கு இடங்களில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், 10 டன் வெங்காயம் தருவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கூட்டுறவுத் துறை மூலம் வெங்காயம் வாங்கி மானிய விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், வெளிமார்க்கெட்டில் வெங்காய விலை குறைய வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago