பெரம்பலூர் மாவட்டத்தில் நவ.5 முதல் கறிக்கோழி உற்பத்தியை நிறுத்த முடிவு

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் நவ.5 முதல் கறிக்கோழி உற்பத்தியை நிறுத்த கறிக்கோழி வளர்ப்பு விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அருளானந்தம் பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

கறிக்கோழி வளர்ப்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.12 வழங்க வேண்டும். நபார்டு மானியம் பெரம்பலூர் மாவட்டத்தில் 112 பண்ணையாளர்களுக்கு வரவில்லை, அதைப் பெற்றுத் தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரபட்சமின்றி அனைத்து பண்ணைகளுக்கும் கோழிக்குஞ்சுகள் தர வேண்டும். கறிக்கோழி விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் மாதந்தோறும் ஆட்சியரின் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். நிரந்தர ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கறிக்கோழி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நவ.5 முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் கறிக்கோழி உற்பத்தியை நிறுத்தி, காலவரையறையின்றி பண்ணைகளை மூடுவது என முடிவு செய்துள்ளோம் என்றார்.

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தங்கபாண்டியன், மாவட்ட பொருளாளர் அழகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர், கறிக்கோழி விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியர்(பொ) ராஜேந்திரனிடம் அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்