பருவமழை தொடங்கி உள்ளதால் கால்வாய்களை தூர்வார வேண்டும் புதுக்கோட்டை விவசாயிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி:

மாவட்டத்தில் பொன்பேத்தி, உடையாளிப்பட்டி போன்ற அதிகமான நெல் விளைந்துள்ள பகுதிகளில் பருவ அல்லது நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். மாவட்ட விவசாயிகள் விரும்பும் ஆலைக்கு கரும்பு அரைவைக்கு அனுமதிக்க வேண்டும். இல்லையேல், குரும்பூரில் மூடப்பட்டுள்ள தனியார் ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தைப் போன்று சீமைக்கருவேல மரங்களை வெட்டி, துண்டு துண்டுகளாக்கும் இயந்திரத்தை அரசே வாங்க வேண்டும்.

தென்னை விவசாயிகள் சங்கத் தலைவர் செல்லதுரை:

மாவட்டத்தில் நெல், கடலை ஆகிய பயிர்களே அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால், அவற்றுக்கான விதைகளை உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு நவீன அரிசி ஆலை அமைத்துக் கொடுக்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கொள்முதல் செய்துள்ள தானியங்களுக்கு வங்கிகள் ஈட்டுக்கடன் கொடுக்க மறுப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே, நடத்தியதைப் போன்று அந்தந்த கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

ஏரிப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் துரைமாணிக்கம்:

அதிகமான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும். பருவமழை தொடங்கி உள்ளதால் கால்வாய்களை விரைந்து தூர்வார வேண்டும். இடுபொருட்களை தட்டுப்பாடின்றி கொடுக்க வேண்டும்.

பின்னர், ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி பேசியது:

மாவட்டத்தில் தேவையான அளவுக்கு விதைகள், இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தேவைக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படும்.

சம்பா நெற்பயிருக்கு நவ.31-ம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும். கோட்டாட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்