ரூ.10.2 கோடி மதிப்பிலான ஆராய்ச்சி திட்டங்களுக்கு முயற்சி சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் தகவல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ.10.2 கோடியில் ஆராய்ச்சி திட்டங்கள் மேற்கொள்ள கருத்துரு சமர்ப்பிக் கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் கே.பிச்சுமணி தெரிவித்தார்.

இப்பல்கலைக்கழகத்தில் 51-வது கல்விசார் நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. துணைவேந்தர் தலை மை வகித்தார். பதிவாளர் ஏ. பலவேசம் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். காணொலி காட்சி மூலம் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

துணைவேந்தர் பேசியதாவது:

கரோனா காலத்திலும் பல்கலைக் கழகத்தைச் சுற்றி 60 முதல் 70 கி.மீ. சுற்றளவில் உள்ள மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் கல்வி நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு ஞானவாணி வானொலி மூலம் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. திருநெல்வேலி வானொலி நிலைய ஒத்துழைப்புடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு வகையான தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. செய்முறை தேர்வுகளையும் ஆன்லைன் மூலம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ.10.2 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி கேட்டு மத்திய அரசிடம் கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை வளங்கள், மன்னார்வளைகுடா வளங்கள் உள்ளிட்ட இப்பகுதியிலுள்ள பல்வேறு வளங்கள் குறித்த ஆய்வுக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

நடப்பு கல்வியாண்டில் பாடத்திட்டங்களுக்கு அனுமதி கேட்டு பல்கலைக்கழகத்துக்கு தாமதமாக கடிதம் எழுதிய கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சில கல்லூரிகளில் ஒருசில பாடங்களுக்கு அதிகமான வரவேற்பு இருந்ததால், அப்பாடங்களுக்கு மாணவர் சேர்க்கையை முடித்துக்கொண்டு, கல்லூரிகள் சார்பில் பல்கலைக்கழகத் திடம் அனுமதி கேட்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் அபராதம் விதிக்க நேரிட்டதாக துணைவேந்தர் விளக்கம் அளித்தார். பல்கலைக்கழகத்தில் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான தேதியை நீட்டிக்க பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், ஆன்லைன் மூலம் பி.காம்., பி.ஏ. ஆங்கிலம், எம்பிஏ பாடங்களை கற்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. 27 பிற பாடங்களையும் இந்தவகையில் கற்பிக்க யுஜிசி அனுமதி கேட்கப் படும் என்று கூறப்பட்டது. ஆன்லைன் மூலம் கற்பித்தல் திட்டத்தில் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் கல்லூரிகள் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பல்கலைக்கழக தமிழ்த்துறையில் 5 ஆண்டுகள் முதுகலை படிப்பு தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்