பேரணாம்பட்டு அருகே ஆந்திராவுக்கு மினி லாரியில் கடத்த முயன்ற 4.75 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல் துறையினர் இரண்டு பேரை கைது செய்தனர்.
தமிழக-ஆந்திர எல்லையில் பேரணாம்பட்டு அருகேயுள்ள பத்தலப்பல்லியில் காவல் துறை சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வழங்கல் துறைக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மாவட்ட வழங்கல் துறையின் பறக்கும் படை வட்டாட்சியர் கோட்டீஸ் வரன் மற்றும் பேரணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சிவசண்முகம் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கர்நாடக மாநில பதிவெண் கொண்ட மினி லாரி ஒன்றை சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் நிறுத்தி சோதனை யிட்டனர். அதில், மூட்டை மூட்டை யாக ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மினி லாரியில் இருந்த பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த இர்பான் (25), முபாரக் (25) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பேரணாம்பட்டில் இருந்து 95 மூட்டைகளில் 4.75 டன் ரேஷன் அரிசியை ஆந்திர மாநிலம் வி.கோட்டாவுக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து மினி லாரியுடன் பிடிபட்ட இரண்டு பேரும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். மினி லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து லாரி உரிமை யாளர் குறித்தும் யாருக்காக ரேஷன் அரிசி கடத்தப்பட்டது என்பது தொடர்பாகவும் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago