அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே அடிப்படை வசதிகளை வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு திருப் பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ‘திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 28 மற்றும் 29-வது வார்டுகளில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் பகுதியில் ஒரு சில தெருக்களை தவிர மற்ற தெருக்களில் கழிவுநீர் கால்வாய் வசதியில்லை. அதேபோல, சீரான சாலை வசதியும் இல்லை.

மழைக்காலம் என்பதால் தெருக்கள் சேறும், சகதியுமாக உள்ளன. வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. துர்நாற்றம் வீசுகிறது. மண் சாலைகள் சேதமடைந்திருப்பதால் மழைநீர் குட்டைப்போல் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.

மின்விளக்குகள் பழுதடைந்து கடந்த 6 மாதங்களாக பெரியார் நகர் இருளில் மூழ்கியுள்ளது. இதையெல்லாம் சீரமைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண் டும் என நகராட்சி ஆணையர், திருப் பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதைக்கண்டித்து மறியலில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளர் விவேக், நகர காவல் ஆய்வாளர் பேபி மற்றும் காவல் துறையினர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தனர். இதையேற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், திருப்பத்தூர் - கிருஷ்ண கிரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்