கிசான் திட்ட முறைகேட்டில் பணத்தை திரும்பப்பெற வெளிமாநிலங்களின் 44 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

பிரதமரின் கிசான் திட்டம் முறை கேட்டில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 340 பேரிடம் இருந்து பணத்தை திரும்பப்பெற வெளி மாநிலங்களைச் சேர்ந்த 44 மாவட்ட ஆட்சியர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தில் தகுதியில்லாத பயனாளிகளை சேர்த்து பணத்தைப் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் தகுதி யில்லாத பயனாளிகளை சேர்த்து முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் மொத்தம் 3 ஆயிரத்து 864 பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டு பணம் பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது. இவர்களில் 340 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் மூலம் ரூ.10.20 லட்சம் முறைகேடாக பணம் பெற்றுள்ளனர்.

தகுதியில்லாத பயனாளிகள் சேர்க்கப்பட்டதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் ரூ.1.35 கோடிக்கு முறைகேடாக பணம் பெற்றுள்ளது உறுதியானது. முறை கேடாக பணம் பெற்றவர்களிடம் இருந்து அந்தப் பணத்தை திரும்பப்பெற சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது. இவர்கள் வீடு வீடாகச் சென்று விசாரணை செய்ததுடன் அவர்கள் பெற்ற பணத்தை மீண்டும் வங்கிக் கணக்கு மூலம் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறப்பு குழுக்களின் தொடர் நடவடிக்கையால் மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 885 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 7 லட்சத்து 53 ஆயிரம் பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர். மீதம் உள்ள நபர்களிடம் இருந்தும் வெளி மாநில நபர்களிடம் இருந்தும் பணத்தை திரும்பப்பெற தேவையான நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘வேலூர் மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் மேற்கு வங்கம், கர்நாடகம், புதுச்சேரி, பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மட்டும் சுமார் 250 பேர் தகுதியற்ற பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து மொத்தம் 340 பயனாளிகளிடம் இருந்து பணத்தை திரும்பப்பெற 44 மாவட்ட ஆட்சியர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கடிதம் எழுதி யுள்ளார். அந்த கடிதம் மீதான நடவடிக்கைகளையும் ஆட்சியர் கண்காணித்து வருகிறார்’’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்