அயோத்தி எஸ்எஸ்பி.யாக தருமபுரி ஜி.முனிராஜ் நியமனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் அயோத்தி மாவட்ட காவல்துறை எஸ்எஸ்பி.யாக தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தஜி.முனிராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டத்தின் அ.பாப்பாரப்பட்டி கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜி.முனிராஜ். கோவை அரசு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்ற இவர், ஹரியாணாவின் சவுத்ரி சரண்சிங் வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பை முடித்தார். கடந்த 2009-ல் மத்திய அரசின் குடிமைப் பணி தேர்வு எழுதிய இவர், ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று உ.பி. காவல் துறை அதிகாரி ஆனார். அப்போது முதல் பல்வேறு முக்கிய மாவட்டங்களில் பணியாற்றி வரும் முனிராஜ் தற்போது காஜியாபாத் மாவட்ட எஸ்எஸ்பியாக உள்ளார். இவரை அயோத்தி மாவட்ட எஸ்எஸ்பியாக இடமாற்றம் செய்து உ.பி. அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அயோத்தி எஸ்எஸ்பி.யாக முனிராஜ் நியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

டெல்லியை ஒட்டியுள்ள காஜியாபாத் மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியாத குற்றச்சாட்டில் இங்கு எஸ்எஸ்பி.யாக இருந்த பவன் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இங்கு இடைக்கால பொறுப்பு எஸ்எஸ்பி.யாக முனிராஜ் நியமிக்கப்பட்டார். என்கவுன்ட்டர்கள் மற்றும் அதிரடி நடவடிக்கைகளால் ‘உ.பி. சிங்கம்’ என்று அழைக்கப்படும் ஜி.முனிராஜ் தனதுநடவடிக்கைகளை காஜியாபாத்திலும் தொடர்ந்தார். இதனால் இங்கு நிரந்தர எஸ்எஸ்பி.யாக உ.பி. அரசு அமர்த்தியது.

இதற்கு முன் புலந்த்ஷெஹர், பரேலி, அலிகர், ஆக்ரா உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் முனிராஜ் பணியாற்றி உள்ளார். உ.பி.யில் பாஜக சார்பில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பிறகு தொடங்கிய என்கவுன்ட்டர்களுக்கு இவரே தொடக்கப் புள்ளி ஆவார்.

பரேலியில் மதநல்லிணக்கத்தை குலைக்க முயன்றதாக ஆளும் கட்சியான பாஜக நிர்வாகிகள் மீதும் வழக்குகளை பதிவு செய்தார். கோவையில் கொள்ளைபோன ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்டு தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார். தமிழகத்தில் வட மாநில கொள்ளையர்கள் தொடர்பான பல வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய முனிராஜ் உதவியுள்ளார். இவருக்குகுடியரசுத் தலைவர் பதக்கமும் வழங்கப்படுள்ளது.

உ.பி.யின் மற்றொரு புனித நகரான வாரணாசியின் மாவட்ட ஆட்சியராக தமிழரான எஸ்.ராஜலிங்கம் ஐஏஎஸ் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு பிறகு அங்கு காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு வரும்தமிழர்கள் அலகாபாத், அயோத்திக்கும் சென்று வரு கின்றனர். இந்நிலையில் அலகா பாத்தில் இவர்களை வரவேற்று கவனிக்கும்பொறுப்பு, அங்கு உதவி ஆட்சியராக இருக்கும் தமிழரான ஏ.சுதன் ஐஏஎஸ் வசம் அளிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி அருகிலுள்ள அம்பேத்கர் மாவட்டத்திலும் தமிழரான சென்னையை சேர்ந்த எ.சாமுவேல் பால், ஆட்சியராக உள்ளார். உ.பி.யில் மேலும் பல முக்கிய மாவட்டங்களிலும் அரசு நிர்வாகத்திலும் 30 தமிழர்கள் அதிகாரிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்