ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த - கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8-ம் தேதி நடந்தஹெலிகாப்டர் விபத்தில் முப்படைதலைமை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப் படை குரூப்கேப்டன் வருண் சிங் தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார்.

வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ராணுவ கமாண்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

90 சதவீத தீக்காயங் களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு 3 முக்கிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. 7 நாட்கள் உயிர் காக்கும் கருவியின் உதவியுடன் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

வருண் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது தந்தை கர்னல் கே.பி.சிங் (ஓய்வு), கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். அவர் குணமடைய வேண்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கேப்டன் வருண் சிங் நேற்று காலையில் உயிரிழந்தார். இதன் மூலம் குன்னூர் அருகே விமானப் படை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

கேப்டன் வருண் சிங்கின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் முக்கிய சாலைகளின் சந்திப்பில் வருண் சிங்கின் புகைப்படத்துக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கேப்டன் வருண் சிங் நாட்டுக்கு பெருமையுடனும் வீரத்துடனும் சேவை ஆற்றினார். மிகுந்த ஈடுபாட்டுடன் கடமையை செய்த வருண்சிங்கை இழந்து வாடும் அவரதுகுடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது செய்த சேவையை நாடு என்றும் மறக்காது” பதிவிட்டுள்ளார்.

சவுர்யா சக்ரா விருது பெற்றவர்

உயிரிழந்த கேப்டன் வருண் சிங் உத்தரபிரதேச மாநிலம் தியோராவை பூர்வீகமாக கொண்டவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றிய அவரது தந்தை கர்னல் கே.பி.சிங்கின் பணிகளால் ஈர்க்கப்பட்டு, இந்திய விமானப் படைக்கு தயாரானார். போபாலில் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்தார். 2004-ம்ஆண்டு அங்கு தேர்ச்சிப் பெற்றஅவர் விமானப்படையில் சேர்ந்தார்.

குரூப் கேப்டன் பதவி வகித்த அவர், குன்னூர் ராணுவ கல்லூரியில் பயிற்சியாளராக பணியாற்றினார். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தை கல்லூரிக்கு அழைத்து வருவதற்காக சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கினார். கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி தேஜஸ் போர் விமானத்தில் ஏற்படவிருந்த விபத்தை தவிர்த்ததற்காக கடந்த சுதந்திர தின விழாவில் உயரிய சவுர்யா சக்ரா விருதை பெற்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE