லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) கோரியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதி மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவத்திலும் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையிலும் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். அந்தக் கார் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு சொந்தமானது. இதையடுத்து, ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர். வேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எஸ்ஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் திட்டமிட்டு விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட 13 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று எஸ்ஐடி போலீஸார் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர். மேலும், கலவரம் ஏற்படுத்துதல், அபாயகரமான ஆயுதங்களால் கடுமையான காயம் ஏற்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் மீது கூடுதலாக பதிவு செய்ய நீதிமன்றத்தில் எஸ்ஐடி போலீஸார் வலியுறுத்தி உள்ளனர்.
‘‘இது எதேச்சையாக நடந்த விபத்து அல்ல. திட்டமிட்டு விவசாயிகள் மீது கார் ஏற்றியுள்ளனர்’’ என்று எஸ்ஐடி விசாரணை அதிகாரி வித்யாராம் திவாகர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago