மக்களின் குரலை ஒடுக்குகிறது : மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

கடந்த நாடாளுமன்ற மழைக்காலகூட்டத் தொடரில் மாநிலங்களவையின் மாண்பை சீர்குலைத்ததாகக் கூறி எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்சினை எழுப்பி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சவுக் வரை நேற்று கண்டன பேரணி நடத்தினர். அப்போது ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறும்போது, ‘‘மக்களின் குரலை மத்திய அரசு ஒடுக்குகிறது. 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது இதை தெளிவாக உணர்த்துகிறது. கடந்த 2வாரங்களாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் குரலுக்கு மத்தியஅரசு செவிசாய்க்கவில்லை. ஜனநாயகத்தை மத்திய அரசு கொலைசெய்து வருகிறது’’ என்றார்.

இதனிடையே, எம்பிக்கள் இடைநீக்கம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE