பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள் கடந்த 2001 டிசம்பர் 13-ம் தேதி, நாடாளுமன்ற வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் 14 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகளும் பிறகு கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தில் நுழைவதை தடுக்கும் முயற்சியில் 8 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.
இந்த தாக்குதலின் 20-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று தனது ட்விட்டர் பதிவில், “2001-ம் ஆண்டு இதே நாளில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றத்தை பாதுகாப்பதில் உயிர் தியாகம் செய்த துணிச்சலான பாதுகாப்பு வீரர்களுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவர்களின் உன்னத தியாகத்திற்கு தேசம் என்றென்றும் நன்றியுடன் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “நாடாளுமன்ற தாக்குதலில் பணியின்போது வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நாட்டுக்கான அவர்களின் சேவையும் உன்னத தியாகமும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஊக்கமளித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். -பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago