புதுடெல்லி: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் நேற்று முன்தினம் அவர் பேசியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகிறது. ஆனால் இதுவரை பொது சிவில் சட்டத்தை நம்மால் அமல்படுத்த முடியவில்லை. ஒன்றுபட்ட இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் அவசியம். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த சிறப்பு குழுவை நியமிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது பாஜக தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெண்களின் உரிமை நிலைநாட்டப்படும். நவீன காலத்துக்கு ஏற்ப பொதுவான சட்டங்கள் அவசியம் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை சுட்டிக் காட்டி பாஜக எம்.பி. நிஷிகாந்த் மக்களவையில் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு வெற்றிகரமாக அமல்படுத்தியுள்ளது. அடுத்ததாக பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago