புதுடெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தினால், சுங்கச் சாவடிகளுக்கு ரூ.2,731கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிதின் கட்கரி, நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்து மூலமாக அளித்தப் பதிலில், ‘விவசாயிகளின் போராட்டத்தால் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தற்போது வரையில் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 65 சுங்கச் சாவடிகளில் ரூ.2,731 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹரியானாவில் ரூ.1,381 கோடியும், பஞ்சாப்பில் ரூ.1,269 கோடியும், ராஜஸ்தானில் ரூ.142 கோடியும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. அந்தச் சட்டங்களுக்கு நாடு முழுவதுமுள்ள விவசாயிகளிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகளில் பெருந்திரளாக டெல்லியை நோக்கிச் சென்று மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். போராட்ட மனநிலையில் இருந்த விவசாயிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிப்பது சாத்தியமில்லாததாக மாறியது. இதனால், அந்த மாநிலங்களில் உள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது. விவசாயிகளின் போராட்டம் ஓராண்டுகளாக தொடர்ந்ததால், கடந்த ஒராண்டாகவே அங்குள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
தற்போது மத்திய அரசு அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றுள்ளது. எனினும், அம்மாநிலங்களில் சுங்கக் கட்டணம் வசூலிப்பு நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில் அங்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பை மீண்டும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago