சர்வதேச விமான போக்குவரத்துச் சேவையை வரும் டிசம்பர் 15 முதல் முழுமையான அளவில் தொடரச் செய்யும் திட்டத்தில் மத்திய அரசு இருந்தது. இந்நிலையில் கரோனா வைரஸின் திரிபான ஒமைக்ரான் உலக அளவில் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், சர்வதேச விமான சேவையை தொடரச் செய்யும் திட்டத்தைத் தள்ளிப் போடுவதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா முதல் அலை வேகமெடுக்கத் தொடங்கியதை அடுத்து, மத்திய அரசு சர்வதேச விமான போக்குவரத்து சேவை மீது கட்டுப்பாடுகள் கொண்டுவந்தது. கரோனா தீவிரம் குறைந்த பிறகும், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான சேவை முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது.
இதற்கிடையில், ஒமைக்ரான் பரவல் சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு, சர்வதேச விமான சேவை தொடர்பான திட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆய்வுக்கு உட்படுத்தியது.
இந்நிலையில், இந்திய விமானப் போக்குவரத்து இயக்கு நரகம், விமான சேவையை முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முடிவை தள்ளிப் போடுவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒமைக்ரான் பரவலின் தீவிரத்தைப் பொறுத்து சர்வதேச விமான சேவை தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.-பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago