திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக இந்தக் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் ஏகாந்தமாக நடைபெற்றது. இந்த ஆண்டும் கரோனா பரவல் முற்றிலும் அகலாத நிலையில் மீண்டும் ஏகாந்தமாக பிரம்மோற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி மாடவீதிகளில் வாகன சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்குள் ஏகாந்தமாக வாகன சேவை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் பிரம்மோற்சவ கொடியேற்ற நிகழ்ச்சி வேதமந்திரங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பாக நடந்தேறியது.
முன்னதாக, ஆந்திர அரசு சார்பில் துணை முதல்வர் புஷ்பா வாணி, தலையில் பட்டு வஸ்திரங்களை சுமந்து வந்து தாயாருக்கு காணிக்கையாக வழங்கினார். பெண் துணை முதல்வர் ஒருவர், தனது குடும்பத்தாருடன் பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்று, அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கியது கோயில் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். வரும் 8-ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago