ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் தீவிரவாத வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 24 கிலோ ஆர்டிஎக்ஸ், 71 கையெறி குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் போலீஸாரால் அழிக்கப்பட்டன.
இதுகுறித்து ரியாசி மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஷைலேந்திர சிங் நேற்று முன்தினம் கூறியதாவது:
ரியாசி மாவட்டம், மகோர் – சசானா பகுதியில் தீவிரவாதம் தொடர்பான வழக்குகளில் கடந்த 2009 முதல் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கை குழுவினரால் ஆர்டிஎக்ஸ், கையெறி குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவை பல ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. எனினும் தற்செயல் வெடிப்பு மூலம் இவை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதை உணர்ந்த போலீஸார், கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை சட்டப்பூர்வமாகவும் பாதுகாப்பாகவும் அழிக்க அனுமதி கோரி சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களை அணுகினர். இதில் 2 வழக்குகளில் வெடிபொருட்களை அழிக்க ரியாசி அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதுபோல் ஜம்முவில் உள்ள என்ஐஏ நீதிமன்றம் 2 வழக்குகளிலும் மகோர் நீதிமன்றம் 11 வழக்குகளிலும் அனுமதி வழங்கின.
இதையடுத்து 15 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 71 கையெறி குண்டுகள், 24 கிலோ ஆர்டிஎக்ஸ், டெட்டனேட்டர்கள், வெடிகுண்டுக்கான ஃபியூஸ்கள் மற்றும் ரிமோட்கள் அழிக்கப்பட்டன.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago