ஓய்வு பெற்ற நீதிபதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ.க்கு அனுமதி :

By செய்திப்பிரிவு

லக்னோ: ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுக்லா பணியாற்றினார். கடந்த ஆண்டு ஜூலையில் அவர் ஓய்வு பெற்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி சுக்லா முக்கிய உத்தரவினை பிறப்பித்தார். அவர் பணம் பெற்றுக் கொண்டு கல்லூரிக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்ததாக புகார் எழுந்தது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக நீதிபதி சுக்லா மீது வழக்கு பதிவு செய்ய உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அனுமதி வழங்கினார். அதன்பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி சுக்லா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்