நவ. 29-ம் தேதி 500 விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லி வருகை : பாரதிய கிசான் யூனியன் தகவல்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த வாரம் அறிவித்தார். ஆனால், இந்த மூன்று சட்டங்களையும் நாடாளுமன்றத்தில் முறைப்படி வாபஸ் பெற்ற பிறகு தான், வீடு திரும்புவோம் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்; போராட்டத்தின் போது உயிரிழந்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்து உள்ளனர்.

இதேபோல, மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி குளிர்கால கூட்டத் தொடரின்ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் எனவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாய சங்கங் களை ஒருங்கிணைக்கும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகைத் நேற்று கூறியதாவது:

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதுடன் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை டெல்லியில் இருந்து நாங்கள் செல்ல மாட்டோம்.

பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங் களில் இருந்து வரும் 29-ம் தேதியன்று 30 டிராக்டர்களில் 500 விவசாயிகள் டெல்லி வரவுள்ளனர். நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்துவது தொடர்பான அறிவிப்பு வரும் 26-ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு ராகேஷ் டிகைத் கூறினார்.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்