இந்திய ரயில்வே சார்பில் ‘ராமாயண் சர்க்யூட் ரயில்’ என்ற புதிய ரயில்சேவை தொடங்கப்பட்டுள்ளது. ராமாயண காப்பியத் தலைவன் ராமபிரானின் வாழ்க்கை தொடர்பான 15 இடங்களுக்கு இந்த ரயில் செல்கிறது.
வாரணாசி, அயோத்தி, பிரயாக்ராஜ், சித்ரகுட், நந்திகிராம், ஜனக்புரி, சீதாமடி, நாசிக், ஹம்பி,ராமேஸ்வரம் உள்ளிட்ட புனிதத்தலங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. சில இடங்களுக்கு பயணிகளை ரயிலிலிருந்து இறக்கி,சாலை வழியாக அழைத்துச் செல்லும் வசதியும் இதில் உள்ளது.
இந்த ரயிலின் முதல் பயணம் டெல்லியின் சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. சுமார் 7,500 கி.மீ.பயணம் செய்யும் இந்த ரயிலில் உணவு விநியோகிக்கும் சர்வர்கள்சாதுக்கள் போல் காணப்பட்டனர். கழுத்தில் ருத்ராட்ச மணி மாலைகளுடன் காவி நிற சீருடையை அவர்கள் அணிந்திருந்தனர். இதனால் பல்வேறு மடங்களின் சாதுக்கள் கடும் கோபம் அடைந்தனர்.
இது தொடர்பாக உஜ்ஜைன் சாதுக்கள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் சுவாமி அவ்தேஷ்புரி கூறும்போது, “உணவு பரிமாறுவோருக்கு சாதுக்கள் உடைகளை அணிவித்து இந்து மதம் அவமதிக்கப்படுகிறது.
இதனை உடனே மாற்ற வலியுறுத்தி ரயில்வே அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், இந்த ரயில் டிசம்பர் 12-ம் தேதிடெல்லி திரும்பும்போது சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவோம்” என்றார்.
இந்த எதிர்ப்பை தொடர்ந்து இந்த ரயிலில் சர்வர்களுக்கான சீருடையை ரயில்வே மாற்றியுள் ளது. அவர்களுக்கு கருப்பு நிற பேன்ட் மற்றும் இளம்பச்சை நிற சட்டை தரப்பட்டுள்ளது. என்றாலும் முகக்கவசம், கையுறைகள் மற்றும் தலைப்பாகை காவி நிறத்திலேயே தொடர்கிறது.
முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த ரயிலில் நூலக வசதியும் உள்ளது. சைவ உணவுக்கான தொகையும் கட்டணத்துடன் வசூ லிக்கப்படுகிறது.
இதேபோன்ற ரயில்கள் மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் இயக்கப்பட உள்ளன. அந்த வகையில் நவம்பர் 27-ல் ‘ராம்பாத் யாத்ரா ஸ்பெஷல்’ என்ற ரயில் பயணத்தை தொடங்குகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago