ஆந்திர சட்டப்பேரவையில் நேற்று வெள்ள பாதிப்புகள் குறித்து வேளாண் துறை அமைச்சர் கண்ணாபாபு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
புயல், கனமழையால் சித் தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வாழும் மக்களின் நிவாரணத்துக்காக அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பும் வரை அவர்களுக்கான உதவிகளை நிறுத்தக் கூடாது என்று முதல்வர் ஜெகன் உத்தரவிட்டுள்ளார். வெள்ளம், மழைக்கு இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று வருவாய் துறை அலுவலர்கள் உட்பட 10 பேரை காணவில்லை. இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதுவரை 90 சதவீதம் பேருக்கு நிதி உதவி வழங்கப்பட்டிருக்கிறது.
கனமழை, வெள்ளத்தால் ஆந்திரா முழுவதும் 8 லட்சம் ஏக்கரில் நெல், வாழை, பருத்தி, மிளகாய், காய், கனிகள் நாசமடைந்துள்ளன. 5.33 லட்சம் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். அரசு ஊழியர்கள் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சமும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்.
வீடு முற்றிலும் சேதம் அடைந்திருந்தால் ரூ. 95 ஆயிரமும், லேசான சேதம் ஏற்பட்டிருந்தால் ரூ.5,200-ம் வழங்கப்படும். வீடு வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டிருந்தால் புதிய வீடு கட்டி தரப்படும். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பசுக்களுக்காக ரூ. 30 ஆயிரமும் ஆடுகளுக்காக தலா ரூ.3 ஆயிரமும் அளிக்கப்படும்.
வெள்ளம் பாதித்த ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.2 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும். 25 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, உருளை கிழங்கு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago