வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் சித்தூர், கடப்பா மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக திருப்பதி கபில தீர்த்தத்தில் இருந்து வெள்ளம் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்ததால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர இயலவில்லை.
மேலும் பல மரங்கள் வேரோடு சாய்ந்ததால் கார்கள், பைக்குகள் சேதமடைந்தன. விளம்பர பலகைகள், வீட்டுப் பொருட்கள் காற்றில் பறந்தன. திருப்பதியில் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் தண்ணீர் நிரம்பியது. மேலும், மேற்கு தேவாலயம், விமான நிலையம் செல்லும் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ரேணிகுண்டா விமான நிலையத்தில் மழை நீர் தேங் கியதால், திருப்பதி வந்த விமானங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கனமழையால் திருப்பதி யிலிருந்து திருமலை செல்லும் மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. திருமலையில் ஏழு மலையான் கோயிலை சுற்றிலும் வெள்ள நீர் தேங்கியது. பக்தர்கள் தங்கும் அறைகளை விட்டு வெளியே வர முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மழை நீர் வெள்ளம் போல் பாய்ந்து செல்வதால், வாகனங்கள் மெதுவாக சென்றன. திருமலையில் பாப விநாசம் செல்லும் சாலை மூடப்பட்டது. ஏற்கெனவே 17, 18-ம் தேதிகளில் அலிபிரி மற்றும் வாரி மெட்டு மலை நடைப்பாதை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago