“நட்சத்திர ஹோட்டல்களில் ஆடம்பரமாக இருந்து கொண்டு, காற்று மாசு விவகாரத்தில் சுலபமாக விவசாயிகள் மீது பழி சுமத்துவது நியாயம் இல்லை" என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் டெல்லி அரசு தாக்கல் செய்திருந்த அறிக்கையில், “விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதே காற்று மாசுக்கு முக்கிய காரணம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயத்தில், மத்திய அரசு தனது அறிக்கையில், “விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகையானது டெல்லி காற்று மாசுவில் வெறும் 10 சதவீதம் தான்" எனக் கூறியிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “டெல்லியை பொறுத்த வரை, விவசாயக் கழிவுகள் அக்டோபருக்கு பிறகுதான் எரிக்கப்படுகின்றன. அப்படி இருக்கும் போது, காற்று மாசுபாட்டுக்கு விவசாயக் கழிவு எரிப்பு எப்படி முக்கிய காரணமாக இருக்க முடியும்?” எனக் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த டெல்லி அரசின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “எந்த மாதத்தில் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெறு கிறதோ, அந்த சமயத்தில் இருக்கும் காற்று மாசுபாட்டின் அளவைதான் எங்களால் குறிப்பிட முடியும். அதன்படி, இந்த மாதத் தில் டெல்லி காற்று மாசுபாட்டில் 58 சதவீதம் வரை விவசாயக் கழிவு எரிப்பு பங்கு வகிக்கிறது" என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:
டெல்லி காற்று மாசு விவகாரத்தில் சதவீத கணக்குகள் இப்போது முக்கியம் கிடையாது. காற்று மாசுபாட்டுக்கு எப்படி தீர்வு காணப் போகிறோம் என்பதுதான் முக்கியம். இவ்வாறு ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்துவது என்பது இந்த விவகாரத்தை திசை திருப்பவே உதவும். இந்த விவகாரத்தை பொறுத்த வரை, அரசு இயந்திரம் தாமாக செயல்படுவது கிடையாது. ஒவ்வொரு விஷயத் திலும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது.
டெல்லி காற்று மாசுபாட்டுக்கு ஒட்டுமொத்தமாக விவசாயிகள் மீது குறை கூறக்கூடாது. சிறிய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், விவசாய கழிவுகளை எரிக்க லட்சக் கணக்கில் பணம் கொடுத்து எப்படி இயந்திரங் களை வாங்க முடியும்? ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஆடம்பரமாக இருந்துகொண்டு, சுலபமாக விவசாயிகள் மீது பழி சுமத்துவது நியாயம் இல்லை. இந்த வழக்கின் மறு விசாரணை 23-ம் தேதி நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். - பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago