திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நவ. 30-ல் பிரம்மோற்சவம் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

திருப்பதி: ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 9 நாட்கள் கார்த்திகை பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கார்த்திகை பிரம்மோற்சவ விழா வரும் 30-ம் தேதி செவ்வாய்கிழமை முதல் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இவ்விழா வரும் டிசம்பர் மாதம் 8-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழா ஏற்பாடுகள் குறித்து நேற்று திருச்சானூர் ஆஸ்தான மண்டபத்தில் திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வீரபிரம்மம் கூறியதாவது: பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் பக்தர்கள் இல்லாமல் ஏகாந்தமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா தொற்று முற்றிலும் ஒழியாத காரணத்தினால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாட வீதிகளில் வாகன சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவத்தில் முக்கிய நாட்களாக, நவம்பர் 30-ம் தேதி கொடியேற்றமும், டிசம்பர் 4-ம் தேதி கஜ வாகன சேவையும், மறுநாள் டிசம்பர் 5-ம் தேதி கருட சேவையும், டிசம்பர் 8-ம் தேதி பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சியும் அன்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சியும் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பதி மலைப்பாதை மூடல்

ஆந்திர மாநிலத்தில் 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்கள் புயலால் கன மழை பெய்ய கூடும் என வானிலை இலாகா எச்சரித்துள்ளதால், திருப்பதி அலிபிரி மற்றும் வாரி மெட்டு ஆகிய இரு மலை நடைப்பாதைகளும் மூடப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 19-ம் தேதி காலை 6 மணிக்கு வழக்கம்போல் பக்தர்கள் இவ்விரு தடங்கள் மூலம் திருமலைக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்