லக்கிம்பூர் கெரி கலவரத்தில் 8 பேர் உயிரிழந்த வழக்கு - விசாரணையை கண்காணிக்க நீதிபதி நியமனம் : உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச மாநில அரசு ஒப்புதல்

By செய்திப்பிரிவு

லக்கிம்பூர் கெரியில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசார ணையைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி கார் விபத்து, அதை் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 4 விவசாயிகள் 3 பாஜக.வினர் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கலவரம் குறித்து விசாரணை நடத்த உத்தர பிரதேச அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றை உச்ச நீதிமன்றம் விசாரித்து, விசாரணையின் போக்குக் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி ரமணா கூறியதாவது:

லக்கிம்பூர் கெரி கலவரம் தொடர்பான விசாரணை குழுவில் ஐபிஎஸ் அந்தஸ்து கொண்ட உயரதிகாரிகளை நியமிக்க வேண்டும். விசாரணை குழுவில் இடம்பெற கூடிய ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை உ.பி. அரசு 16-ம் தேதி (இன்று) சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன், இந்த விசார ணையைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர் நீதின்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு தலைமை நீதிபதி ரமணா கூறினார்.

உ.பி. அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே கூறும்போது, ‘‘கலவர வழக்கு விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிப்பதில் உ.பி. அரசுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அவர் உ.பி.யை சேர்ந்தவராக இருக்க கூடாது என்று சொல்ல கூடாது. ஓய்வு பெற்ற நீதிபதி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று பார்ப்பதை விட, திறமையை பார்த்து நியமிக்க வேண்டும். உச்ச நீதிமன்றமே நீதிபதியை நியமித்தாலும் ஏற்கிறோம்’’ என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி ரமணா கூறுகையில், ‘‘கலவர வழக்கு விசாரணையை கண் காணிக்க யார் விருப்பம் தெரிவிக் கின்றனர் என்பது குறித்து தெரிந்து கொண்டு அதன்பிறகு தெரி விக்கிறோம்’’ என்றார். விசா ரணை புதன்கிழமைக்கு (நாளை) தள்ளி வைக்கப்பட்டது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்