மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ கர்னல் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் பகுதியில் நேற்று முன்தினம் வாகனத்தில் வந்து கொண்டிருந்த அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் விப்லவ் திரிபாதி உள்ளிட்டோர் மீது தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினர். இதில் விப்லவ், அவரது மனைவி, மகன், 4 ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள தாவது:
மணிப்பூரில் ராணுவ வாகனத் தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பதன் மூலம் நாட்டை காப்பதில் பிரதமர் மோடி அரசு செயலற்று உள்ளது என்பதை மீண்டும் நிரூபணமாகி உள்ளது. உயிரிழந்த தியாகிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் தியாகத்தை இந்த தேசம் என்றென்றும் நினைவுகூரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறும்போது, "மணிப்பூரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு எனது பணிவான அஞ்சலிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தியாகிகளின் தியாகத்தை தேசம் என்றென்றும் நினைவுகூரும். தீவிரவாதிகளின் இந்த கோழைத் தனமான செயலுக்கு எதிராக நாடு முழுவதும் ஒன்றுபட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago